Monday, November 30, 2009

ஊருக்கு மட்டும் போதனையா?

சில பிரசங்கிகள் பைபிளில் இயேசுகிறிஸ்துவால் சொல்லப்பட்டுள்ள அத்தனை கருத்துக்களையும் மேடையில் முழங்குவார்கள். ஆனால், நடைமுறையில் எப்படி எப்படியோ நடந்து கொள்கின்றனர். ஊருக்குச் செய்யப்படும் உபதேசம் தங்களுக்கல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஒரு இளைய போதகரின் கதையைக் கேளுங்கள். அவர் ஒருநாள் நியூயார்க் நகர பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு டாலர் கொடுத்து தான் செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்தார். கண்டக்டர் அவருக்கு சில்லரை தரும் போது, சற்று அதிகமாகக் கொடுத்து விட்டார். போதகர் பணத்தை எண்ணிப்பார்த்தார். கூடுதலாக பத்து பென்ஸ் இருந்தது. இந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டாலும் கூட, போக்குவரத்து துறைக்கு நஷ்டம் வந்துவிடப்போவதில்லை என்று முதலில் நினைத்தார். பின்னர், முதல்நாள் ஒரு கூட்டத்தில், "பிறரை குறைத்தோ, கூட்டியோ ஏமாற்றுவது சரியல்ல' என்று பிரசங்கம் செய்தது நினைவுக்கு வந்தது.


உடனே கண்டக்டரை அழைத்து பத்து பென்ஸைக் கொடுத்து விட்டார். கண்டக்டர் புன்னகையுடன், ""இந்த பணத்தை வேண்டுமென்றே தான் உங்களுக்கு அதிகமாகக் கொடுத்தேன். நீங்கள் பிரசங்கித்தபடி நடந்து கொள்கிறீர்களா என்று சோதிக்கவே அவ்வாறு செய்தேன். என் சோதனையில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்,'' என்றார்.


பணத்தைத் திருப்பிக் கொடுத்ததன் மூலம், அந்தப் போதகர் தனது பேச்சும் செயலும் ஒன்று என்பதை நிரூபித்துக் கொண்டார்.


"திரளான ஐசுவரியத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது,'' என்ற பைபிள் வாசகமே அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது.

No comments:

Post a Comment